மயங்கி கிடந்த பாம்பிற்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றிய சமூக ஆர்வலர்! - பாம்பிற்கு தண்ணீர் கொடுத்த சமூக ஆர்வலர்
கடலூர் அருகே உள்ள திருச்சோபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அலுமினிய வியாபாரம் செய்து வருகிறார். இவர் வீட்டு வாசலில் சாரைப்பாம்பு ஒன்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதைக் கண்ட நடராஜன், பாம்பை மீட்பதற்காக சமூக ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செல்லா அங்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது மயங்கிய நிலையில் கிடந்த பாம்பிற்கு தண்ணீர் கொடுத்தால் காப்பாற்றலாம் என்பதால், தண்ணீர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த பாம்பு அவர் கொடுத்த தண்ணீரை குடிக்கத் தொடங்கியது.
தண்ணீர் குடித்த பிறகு பாம்பு தெளிவடைந்து விட்ட நிலையில், அந்தப் பாம்பை பாட்டிலில் பிடித்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் விட்டார் செல்லா. வீடுகளில் எலிகளுக்காக வைக்கப்படும் விஷத்தை சாப்பிட்டு விட்டு மயக்கம் அடைந்து இருந்த எலியை பாம்பு விழுங்கி இருக்கலாம் என்றும், அவ்வாறு விஷம் அருந்திய எலியினை உண்டால் இவ்வாறுதான் மயக்கம் அடையும் என செல்லா தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களால் சிலாகித்துப் பார்க்கப்பட்டது.