கோவை வ.உ.சி பூங்காவில் இருந்து சிறுவாணி வனப்பகுதிக்கு 17 பாம்புகள் இடமாற்றம்! - Coimbatore district
Published : Jan 6, 2024, 5:04 PM IST
கோயம்புத்தூர்: வ.உ.சி பூங்காவில் இடவசதி இல்லாததால், மேலும் சில பாம்புகள் பிடிக்கப்பட்டு சிறுவாணி வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கோவை மாவட்டத்தில் வ.உ.சி உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் சிங்கம், புலி, கரடி, பாம்பு உள்ளிட்ட ஏராளமான விலங்குகள், பறவைகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த பூங்காவில் இடவசதி இல்லாத காரணத்தினால், மத்திய வன பாதுகாப்பு ஆணையம் பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது.
இதனை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருந்து பெலிக்கான், குரங்குகள், பாம்புகள், முதலைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வண்டலூர் மற்றும் வேலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில், இன்று மேலும் சில பாம்புகள் சிறுவாணி வனப்பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டன.
பூங்காவில் இருந்த 10 நாகப்பாம்புகள், 3 கண்ணாடி விரியன், 4 சாரைப்பாம்புகள் ஆகியவை பெட்டிக்குள் அடைக்கப்பட்டு, வனத்துறை வாகனம் மூலம் இடமாற்றம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த பாம்புகள் பிடிக்கப்பட்டன.