வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து அலுவலகத்திற்குள் விட்ட நபர்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், செகந்திராபாத்தில் உள்ள அல்வால் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவரது வீட்டிற்குள் கழிவு நீருடன் சேர்ந்து பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
இதனால் குடும்பத்தினர் அச்சமடைந்த நிலையில், பாம்பினை பிடித்து அப்புறப்படுத்துவதற்காக சம்பத், பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி ஊழியர்களை அழைத்துள்ளார். அழைப்பு விடுத்து 6 மணி நேரமாகியும் உதவிக்கு ஆட்கள் வராததால் சம்பத் விரக்தி அடைந்துள்ளார். இதனை அடுத்து பாம்பை தானே பிடித்து விடலாம் என முடிவெடுத்துள்ளார்.
பாம்பை பிடித்த சம்பத் அதை ஒரு பெட்டியில் அடைத்து எடுத்துக் கொண்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு அலுவலக மேஜையில், தான் எடுத்து வந்த பாம்பினை வைத்து சம்பத் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்குள் புகுந்த பாம்பினை பிடிப்பதற்கு ஊழியர்கள் வராத காரணத்தினால் பாம்பை பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்குள் விட்டு ஒரு நபர் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை அடுத்து ஹைதராபாத் மாநகராட்சி, பிரச்னைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் 90001 13667 என்ற ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.