சகபயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சிவகங்கையைச் சேர்ந்த நபர் கைது! - Sivaganga
கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தின் கோயிலாண்டு அருகில் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது ரயிலில் பயணித்த இரு பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ஒரு பயணி, தனது சக பயணியை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
பின்னர் இது தொடர்பான தகவலை மற்ற பயணிகள், ரயில்வே காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை அடைந்தபோது, அங்கிருந்த ரயில்வே காவல் துறையினரால் சக பயணியை தள்ளி விட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சோனை முத்து (48) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர், தான் சக பயணி ஒருவரை தள்ளி விட்டு கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இருப்பினும், இந்த செயலை அவர் எதற்காக செய்தார் என்ற காரணம் தெரியவில்லை. மேலும் சம்பவத்தின்போது இருவரும் குடிபோதையில் இருந்ததாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட சகப் பயணி, ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம் உயிரிழந்த பயணியின் உடல் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள உடற்கூராய்வு அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.