காலில் காயத்துடன் உணவு தேடும் ஒற்றை காட்டு யானை - arunachalakollakottai
திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அருணாச்சல கொல்ல கொட்டாய், நாயக்கனூர், பழையவூர் மற்றும் காவலூர் ஆகிய மலை கிராமங்களில், கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை உணவு தேடி கிராம பகுதிக்குள் வந்து சென்ற வண்ணம் உள்ளது. இந்த நிலையில், மீண்டும் நேற்று (ஏப்ரல் 22) நள்ளிரவு அருணாச்சல கொல்ல கொட்டாய் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்த ஒற்றை காட்டு யானை, விளைநிலங்களில் இருந்த மாமரம் மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், ஒற்றை காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட விடிய விடிய போராடி உள்ளனர். மேலும், ஒற்றை காட்டு யானையின் காலில் காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் கிராம பகுதியில் வந்து பிளிரி வருவதாகவும், எனவே அந்த யானைக்கு வனத் துறையினர் உரிய சிகிச்சை அளித்து, மீண்டும் கிராம பகுதிகளுக்கு வராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக நடைப்பெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வனத் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.