காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் வெள்ளித்தேர் திருவிழா! - ஏகாம்பரநாதர் திருக்கோயில்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிரம்மோற்சவத் திருவிழா, கடந்த 6 தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் முதன்மையானதாக இந்த கோயிலின் பிரம்மோற்சவம் பங்குனி மாதம் துவங்கி 14 நாட்கள் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக ஆறாம் நாளான நேற்று இரவு, சுமார் 32 அடிக்கு மேல் உள்ள வெள்ளித் தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
தமிழ்நாட்டிலேயே இந்த அளவுக்கு உயரமான வெள்ளித் தேரில் சிவனும் - பார்வதியும் ஒன்றாக அமர்ந்து காட்சி அளிப்பது இங்கு மட்டும் தான் எனக் கூறப்படுகிறது. பெரும்பாலான வெள்ளித் தேர்த் திருவிழாக்களில் சிவன் மட்டுமே காட்சி அளிப்பார். அம்மன் தனியாகக் காட்சியளிப்பது உண்டு எனக் கூறப்படுகிறது.
மேலும் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி, வெள்ளித் தேரில் எழுந்தருளி ஏகாம்பரநாதர் சன்னதியிலிருந்து பூக்கடை சத்திரம், நான்கு ராஜ வீதி, கச்சபேஸ்வரர் கோவில், சங்கரமடம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி உலா வந்து பின்பு கோயிலைச் சென்றடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் வழி நெடுகிலும் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டு தீபாராதனை காண்பித்து ஏகாம்பரநாதரை வழிபட்டுச் சென்றனர்.