"அயோத்தியில் பாட ஆசை" - ராமாயண இதிகாசத்தை சொற்பொழிவாகக் கூறி அசத்திய 7 வயது கோவை சிறுவன்! - மோடி
கோயம்புத்தூர்:ராம்நகர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், மலர்விழி தம்பதியரின் 7 வயது மகன் சௌரவ் சிவகுமார். இவர் ஆன்மிக கதைகளை ஆர்வமுடன் கேட்டு வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது ஆர்வத்தை கவனித்த பெற்றோர், ராமாயண இதிகாச புராணத்தை தமிழில் இவருக்கு சொல்லி கொடுத்துள்ளனர். இதை ஆழமாக கவனித்த சிறுவன் முழு கதையையும் மனதில் உள்வாங்கி, அதை அப்படியே சிறிதும் பிறழாமல் அதே சமயத்தில் வேகமாகப் பிறருக்கு புரியும் படி கூறத் துவங்கியுள்ளார்.
இவரது இந்த அரிய திறமையைக் கண்ட இவரது பெற்றோர் அளித்த தொடர் பயிற்சியில், ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி மற்றும் ஆதிசங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறுவன் சௌரவ் முழு இராமாயண இதிகாசக் கதையை சமஸ்கிருத ஸ்லோகங்கள் மற்றும் கம்பராமாயணத்தின் பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் வரை 1 மணி நேரம் 37 நிமிடங்களில் சொற்பொழிவாகக் கூறி அசத்தியுள்ளார்.
ஏழு வயதே ஆன சிறுவனின் சாதனையைப் பாராட்டி இந்தியா உலக சாதனைப் புத்தகம் இவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்துள்ளது. இதற்கு முன்னர் கலாம் புக் ரெக்கார்ட்ஸ் இவரது ராமாயண சாதனையைப் பாராட்டி அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு ராமாயண கதையையும் எழுத்து தமிழில் வெறும் 40 நாளில் பேசத் தயாராகி சாதனை படைத்த சிறுவன் சௌரவிற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சௌரவ் கூறும் போது, "அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் ராமாயண இதிகாசத்தை நான் பாட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.