திருச்செந்தூர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; 100 அடிக்கு மேல் உள்வாங்கிய கடல்!
திருச்செந்தூர்:ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், தொடர் விடுமுறையை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, குடும்பம் குடும்பமாக சுவாமி தரிசனம் செய்திட அதிக படியான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, கோயில் கடற்கரை வளாகம் மற்றும் நாழிக்கிணறு பகுதியில், மிகுந்த பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. எப்போதும், பெளர்ணமி அம்மாவாசை போன்ற கனத்த நாட்களில் கடல் உள் வாங்குவது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இன்று சுமார் 100 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி பாறைகள் தெரியத் தொடங்கியது.
இதனைக் கண்ட பக்தர்கள் அனைவரும் வியப்புடன் கடலில் புனித நீராடி புகைப்படம் எடுத்தும், கடலில் சங்குகளை எடுத்து விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும், விடுமுறை நாளான இன்று ( ஏப்ரல் 9 ) அதிக படியான பக்தர்கள் வருவதால், திருச்செந்தூர் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
இதையும் படிங்க:சிஆர்பிஎப் தேர்வு: தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழிகளிலும் நடத்த நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை