நெல்லையில் ஒரு நிமிடத்தில் 2 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவிகள் அசத்தல்! - 5000 மாணவிகள்
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப் பள்ளியில், “விதைத் திருவிழா” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக வெப்பமயமாதல் காரணமாக மழை பொய்த்து தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர், அப்துல் கலாமின் கனவு திட்டங்களில் ஒன்றான “அனைவரும் மரம் நட வேண்டும்” என்பதை வலியுறுத்தி இந்த விதைத் திருவிழா நடைபெற்றது.
இதனையொட்டி இஞ்ஞாசியர் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் 5000 மாணவிகள் ஒன்றிணைந்து ஒரு நிமிடத்தில் 2 லட்சம் விதைப்பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுக்காக பள்ளியில் படிக்கும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவிகளும், பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமர வைக்கப்பட்டு ஒரு நிமிட அவகாசத்திற்கான விசில் ஊதப்பட்டது.
இதைத்தொடர்ந்து அனைத்து மாணவிகளும் ஒரு நிமிடத்திற்குள் 10 விதைப்பந்துகளை உருட்டி தயாரித்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தயாரிக்கப்பட்ட அனைத்து விதைப்பந்துகளும் சேகரிக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் தாமிரபரணி நதியின், இரு கரைகளிலும் வீசுவதற்கான ஏற்பாடுகள் பள்ளி நிர்வாகம் மற்றும் சமூக அலுவலர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.