கல்விக் கடன் காப்பீடு பணத்தில் ஆன்லைன் ரம்மி.. ரூ.34 லட்சம் ஊழல் செய்த வங்கி அதிகாரி கைது! - Vellore news in Tamil
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வங்கியின் (ராஸ்மிக்) கல்விக்கடன் பிரிவில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர் விருதுநகரைச் சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் (38). இவர் வாடிக்கையாளர்கள் செலுத்தும் கல்விக் கடன் காப்பீட்டுத் தொகையை முறையாக வங்கிக் கணக்கில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
அப்போது, வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் யோகேஸ்வர பாண்டியன் 137 நபர்கள் செலுத்திய கல்விக் கடன் காப்பீட்டுத் தொகையான 34,10,622 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தாமல், தன்னுடைய இரு வங்கிக் கணக்குகளில் செலுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து, எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் சிவகுமார் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எஸ்பிஐ வங்கியின் கல்விக் கடன் பிரிவு உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து, வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். போலீசாரின் விசாரணையில் மோசடி செய்த பணத்தை யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் இழந்தது தெரியவந்துள்ளது.