யானைகளுடன் விபரீத செல்பி.. ஈரோட்டில் நடந்தது என்ன?
ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் கோடை மழை தொடர்ந்து பெய்ததால் வனப்பகுதியில் காய்ந்துபோன செடிகள் மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளன. பண்ணாரி முதல் திம்பம் வரை சாலையின் இருபுறமும் மரங்கள் பச்சைப் பசுமையாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் இயற்கையை ரசித்தவாறு செல்கின்றனர்.
வாகன ஓட்டிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ள இந்த பசுமையான வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாகச் சாலையோரம் முகாமிட்டு பசுந்தழைகளை உண்ணுகின்றன. பண்ணாரி கோவிலுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் ஆர்வம் காரணமாக ஆபத்தை உணராமல் யானைகள் முன் அருகே சென்று புகைப்படம் எடுத்து மகிழும் நிகழ்வு தொடருகிறது.
இந்நிலையில் யானைகள் கூட்டமாக நின்றிருந்தபோது அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், புகைப்படம் எடுத்ததால் எரிச்சலடைந்த யானைகள் அவர்களை வேகமாகத் துரத்தவே வாகன ஓட்டிகள் ஓடி தப்பினர். மேலும் அங்கிருந்த பிற வாகனங்கள் சப்தம் போட்டதால் யானைகள் திரும்பி வந்த வழியே சென்றன.
பண்ணாரி சாலையில் முகாமிட்டுள்ள யானைகளைப் பயணிகள் புகைப்படம் எடுக்கும் போது துரத்திய சம்பவத்தையடுத்து வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதனைத் தொடர்ந்து, வன விலங்குகளை எரிச்சலூட்டும் வகையில் புகைப்படம் எடுத்து இடையூறு ஏற்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க:Arikomban Update: தேனியில் முதல் உயிர் பலி வாங்கிய அரி கொம்பன் யானை!