சங்கடஹர சதுர்த்தி: வேலூர் கோட்டை விநாயகருக்கு வெள்ளிக் கவச அலங்காரம்! - A silver armor decoration for Ganesha
வேலூர்:நேற்று சங்கடஹார சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயிலில் இருக்கும் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல் மாலை, மலர் மாலைகள் அணிவித்தும், வெள்ளிக் கவசத்துடன் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடைபெற்றது.
சங்கடஹர சதுர்த்தியின் நம்பிக்கை: சங்கடஹர சதுர்த்தி விரதம், விநாயகப் பெருமானுக்குரியது. விநாயகரை வழிபடுவது என்பது அனைத்து விதமான பிரச்னைகளுக்குமான தீர்வை அளிப்பது. எளிதில் கடைப்பிடிக்க கூடியது. பிரச்னைகள் தீரப் பல வழிகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் கடைப்பிடித்துப் பயன் பெற வேண்டிய விரதம் இது.
அதிகாலை நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்கலாம். நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து விரதமிருக்கலாம். இயலாதவர்கள் ஒருவேளை உணவு உண்டு விரதமிருக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபடலாம். வீட்டில் விநாயகரை வழிபடுபவர்கள், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்குப் பூஜை செய்து, அதற்கு பின் படம் அல்லது சிலைக்கு பூஜை செய்ய வேண்டும்.