தேனியில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கொள்ளை? - வீடியோ வெளியிட்டு மக்கள் வேதனை!
Published : Sep 2, 2023, 7:40 AM IST
தேனி: சட்ட விரோதமாக கனிமவள கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சாலையில், தனியார் மருத்துவமனைக்கு எதிரே உள்ள கரட்டுப் பகுதியில் மர்ம நபர்கள் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் புகார்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், கனிமவளத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயல்பட்டு வருவதாக சுக்காங்கல்பட்டி பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர். மேலும், தினந்தோறும் பொக்லைன் எந்திரம் கொண்டு டிப்பர் லாரிகளில் மண் அள்ளிச் செல்லும் கொள்ளை கும்பலுக்கு, இப்பகுதி அதிகாரிகளும் துணை போவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கனிமவளத் துறையில் எந்தவித அனுமதியும் பெறாமல் தொடர் திருட்டு நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட இடத்தை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக காவல்துறையில் புகார் அளித்து கனிமவள கொள்ளையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அனுமதி பெறாமல் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் மீது தேனி மாவட்ட சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இது போன்று அனுமதியில்லாமல் கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது என்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா, உடனடியாக கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுக்க முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.