வேலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் புழுதி பறந்த சமத்துவப் பொங்கல்!
Published : Jan 12, 2024, 1:46 PM IST
|Updated : Jan 12, 2024, 2:11 PM IST
வேலூர்:தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜன.15ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக, வேலூர் மாவட்டத்தில் தனியார் மகளிர் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கல்லூரிகளுக்கு மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வருகை புரிந்தனர்.
மேலும், கல்லூரி நுழைவு வாயிலில் வாழை மரம், கரும்புக் கட்டுகள் கட்டப்பட்டு, வண்ண கோலமிடப்பட்டிருந்தது. கல்லூரி வளாகத்தில் தனித்தனியாக ஒவ்வொரு துறையைச் சார்ந்த மாணவிகள் மண் பானையில் பொங்கல் வைத்து, பொங்கல் பொங்கிய போது பொங்கலோ பொங்கல் என்று சத்தமாக கூறி, குதூகலத்துடன் சமத்துவப் பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழந்தனர்.
பின்னர் பொங்கல் பானை முன்பு மாணவிகள் தங்களது நண்பர்களுடன் நின்று கொண்டு செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், மாணவியர் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கும்மியாட்டம், கரகாட்டம் ஆகியவையும், கோலாட்டம் மற்றும் தமிழ் திரைப்படப் பாடலுக்கு ஏற்றவாறு நடனங்களை ஆடியும் அசத்தினர். அதன்பின், பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லுாரிப் பேராசிரியர்கள், மாணவியர் என 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.