நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு.. இருசக்கர திருடர்களின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.. - chain snatching
சேலம் மாநகர் குரங்கு சாவடி அருகே அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (37). இவர் நாள்தோறும் அதிகாலையில் குரங்குச்சாவடி பகுதியில் நடைப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம்போல நேற்று (ஜூலை 3) அதிகாலை 5.20 மணிக்கு, குரங்கு சாவடி விநாயகர் கோவில் அருகே நடை பயிற்சி மேற்கொண்டு உள்ளார். அப்போது அந்த வழியாக திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், அனிதாவை நோக்கி வந்து உள்ளனர்.
இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டு அனிதா ஒரு நொடி திரும்பிப் பார்ப்பதற்குள், ஹெல்மெட் அணிந்திருந்த மர்ம இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அனிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகினர். தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டதை உணர்ந்த அனிதா, ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டுள்ளார்.
அதை கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை துரத்திச் சென்று உள்ளார். ஆனாலும் அவர்கள் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினர். இதனைத் தொடர்ந்து சங்கிலிப் பறிப்பு சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் அனிதா புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நடைப்பயிற்சி சென்ற அனிதாவிடம் ஏழு பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.