Salem:அடிப்படை வசதிகள் எங்கே? தர்ணாவில் ஈடுபட்ட எம்எல்ஏ அருள் - சேலத்தில் நடப்பது என்ன? - தர்ணாவில் ஈடுபட்ட எம்எல்ஏ அருள்
சேலம்:சேலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஏழு ஊராட்சிகள் சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் வருகின்றன. இந்த ஏழு ஊராட்சிகளிலும் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இதற்கானப் பணிகள் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாகவும் இதனால், சாலைகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, சாலை ஒப்பந்தத்தின்போது 18% கமிஷன் வழங்குவதாகவும், இதுவே சாலை உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தரமற்ற முறையில் உள்ளதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே, உடனடியாக இதனை ஆய்வு மேற்கொண்டு தரமான சாலைகளை அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்தி சேலம் மேற்குத் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் ரா.அருள், சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் இது தொடர்பாக சேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் கூட, தர்ணாவை கைவிட மறுத்து தொடர் போராட்டத்தில் அவர் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர், பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் சேலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அடிப்படை வசதிகளை சாலை வசதிகளை முறையாக செய்து தரவில்லை என்றும்; ஆகவே, இன்று போராட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறினார். உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
எம்எல்ஏ-வின் இப்போராட்டத்தால் சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் பரபரப்பு நிலவியது. அப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.