சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேம்! பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வழிபாடு!
Published : Oct 25, 2023, 12:46 PM IST
சேலம்:புகழ் பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். யானை மற்றும் குதிரைகளிளும் தீர்த்ததை எடுத்து சென்று வழிபாடு செய்தனர்.
சேலம் அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வருகிற 27ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.
சேலம் கிச்சிபாளையம் பகுதியில் தொடங்கிய இந்த தீர்த்தக் குட ஊர்வலம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, சுகவனேஸ்வரர் திருக்கோயில் வழியாக சென்று மாரியம்மன் கோயில் பகுதியில் நிறைவு பெற்றது. இந்த ஊர்வலத்தில் பசு மாடு, கன்று குட்டி, யானை, குதிரைகளுடன் முளைப்பாரி ஏந்தி ஆயிரக்கணக்கான பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் மாரியம்மன் கோயில் உள்ளே வைக்கப்பட்டு இருந்த புனித கலசங்களில் ஊற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னுட்டு நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு வருவதால் சேலம் மாநகர் திருவிழா கோலம் பூண்டுள்ளது.