வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய சேலம் கலெக்டர்! - சேலம்
சேலம்: தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்தது. தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சேலம் ஜான்சன் பேட்டை அருகே உள்ள திடீர் நகர் பகுதியில், குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ள புலம்பெயர் வட மாநில தொழிலாளர்களை, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் உதவி ஆணையர் மாடசாமி ஆகியோர் சந்தித்து பேசினார்.
அப்போது, அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டு அறிந்த ஆட்சியர், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், உங்களுக்கு பாதுகாப்பாக தமிழக அரசும், காவல்துறையும் உள்ளது என்று உறுதி தெரிவித்தார். தொடர்ந்து வட மாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாக இனிப்புகளை ஊட்டி உற்சாகமாக கொண்டாடினார்.
அதே போல் பதிலுக்கு வடமாநில தொழிலாளர்கள் ஆட்சியருக்கும், காவல் உதவி ஆணையாளருக்கும் இனிப்புகளை ஊட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், "சமூக வலைத்தளங்களில் வடமாநிலத்தவர்களை தாக்குவது போல் பொய்யான வதந்திகள் பரவி வருகிறது. இதனை நம்ப வேண்டாம். தமிழக அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. காவல்துறையும் உங்களுக்கு தேவையான பாதுகாப்பையும் வசதிகளையும் செய்து தரும்.
சமூக வலைத்தளங்களில் இது போன்ற வதந்திகளை பரப்புவோர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மிகக் கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.