இரும்புப் பெட்டிக்குள் புதையலா?.. பெட்டியை திறக்கும் பல மணி நேர போராட்டத்தில் கிடைத்தது என்ன?
வேலூர்: குடியாத்தம் போஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இத்திரீஸ் (57). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான பழைய இரும்பு பெட்டி லாக்கர் ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட அந்த இரும்பு பெட்டியை மேல் ஆலத்தூர் ரோட்டில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பல ஆண்டுகளாக இவர் வைத்திருந்ததாகவும், அதனை தற்போது ஜோதிமடம் மசூதிக்கு இத்திரீஸ் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கவுண்டன்யா மகாநதி ஆற்றை ஒட்டியபடி இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர் இத்திரீஸ் வழங்கிய இரும்பு பெட்டி ஆற்றங்கரையில் கண்டெடுத்ததாகவும், அதில் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் புதையல் இருப்பதாகவும் காவல்துறையினருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குடியாத்தம் DSP ராமமூர்த்தி, கோட்டாட்சியர் வெங்கட்ராமன், வட்டாட்சியர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் இரும்பு பெட்டியை எடுத்துச் செல்வதற்காக முயற்சி செய்தனர். இதனிடையே அங்கிருந்த இஸ்லாமியர்கள் இந்த இரும்பு பெட்டி இத்திரீஸ் என்பவருடைய குடும்பத்திற்கு சொந்தமான இரும்புபெட்டி என்றும் இதனுடைய சாவி வீட்டில் உள்ளதாகவும், சில தினங்களில் அதற்கான சாவியை தருகிறேன் என்றும் இந்த பெட்டியை அவர் மசூதிக்கு வழங்கி விட்டதாகவும் அதிகாரிகளிடம் கூறினர்.
ஆனால் அதிகாரிகள் இதில் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாக வதந்தி பரவியதால், இதனை வருவாய் துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று திறப்பதாக கூறினர். ஆனால் அங்கு இருந்த இஸ்லாமியர்கள் இந்த பெட்டியை இங்கேயே திறக்கும்படி கூறினர். இதனைத் தொடர்ந்து அந்த இரும்பு பெட்டியை அதிகாரிகள் சிறிய அளவிலான இயந்திரம் கொண்டு வெட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆனால், பல மணி நேரம் போராடியும் அந்த பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனையடுத்து அந்த இரும்பு பெட்டியை குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். மேலும் தனியாருக்கு சொந்தமான இரும்பு பெட்டியில் புதையல் இருப்பதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.