ஓய்வூதியர்களுக்கிடையே உள்ள ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும் - ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்கம் வலியுறுத்தல் - நாகப்பட்டினம்
மயிலாடுதுறை: சீர்காழி தனியார் திருமண மண்டபத்தில் மூத்த ஓய்வூதியர்கள் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில தலைவர் ரெங்கராஜ் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,"ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்கம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. வெள்ளி விழா மாநாட்டை தமிழக முதலமைச்சரை அழைத்து நடத்திட முடிவு செய்து உள்ளோம்" என்று கூறினார்.
மேலும், "மத்திய அரசாங்கம் 7வது ஊதியக் குழுவில் நிறைவேற்றிய மூத்த ஓய்வூதியருக்கும், இளைய ஓய்வூதியருக்கும் இருக்கக்கூடிய ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய தனியான சிறப்பு கமிட்டி அமைத்து அறிக்கை பெற்று அதனை அமல்படுத்தி உள்ளது. அதன்படி தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் நிறைவேற்ற வேண்டும். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்" என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஓய்வு பெறும் போது கம்புடேஷன் (Commutation) என்ற தொகையை அரசு வழங்குகிறது. இதற்காக 15 ஆண்டுகாலம் தவணையாக பிடித்து அந்த தொகை வழங்கப்படுகிறது. இவை மற்ற மாநிலங்களில் 12 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு உள்ளது. அதேப் போல் தமிழக அரசும் 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மேலும், பழைய மருத்துவக் காப்பீடு முறையை அரசு மாற்றியமைத்து உள்ளது. அரசே மருத்துவக் காப்பீட்டு அட்டையை வடிவமைத்து காப்பீட்டு கழகம் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும், இந்த தீர்மானங்கள் வெள்ளி விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும்" மாநில தலைவர் ரெங்கராஜ் கூறினார்.