விவசாய நிலத்தில் புகுந்த 9 அடி மலைப்பாம்பு மீட்பு!
Published : Nov 18, 2023, 5:47 PM IST
தேனி: போடிநாயக்கனூர் அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த ஒன்பது அடி நீள மலைப்பாம்பை, தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான தனியார் தோட்டத்தில் இன்று (நவ.18) காலை விவசாயப் பணிக்காக கூலி ஆட்கள் வேலை செய்து வந்துள்ளனர்.
அப்போது நிலத்தில் சுமார் 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து வெளியே வந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, போடிநாயக்கனூர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மலைப்பாம்பை பாதுகாப்பான முறையில் உயிருடன் பிடித்துள்ளனர். இதனையடுத்து, போடி நாயக்கனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், பிடிபட்ட பாம்பு, பாதுகாப்பாக தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கு வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஆற்றில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு , அருகிலுள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.