விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை அடித்து விரட்டிய போலீஸ்!
திண்டுக்கல்:பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகானந்தம் (35). இவர், நேற்று (ஜூன் 30) பழனியில் இருந்து பாப்பம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். பாப்பம்பட்டி பிரிவு அருகே சென்றபோது பள்ளி பேருந்து ஒன்று அவருடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், முருகானந்தம் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், இதனையறிந்த முருகானந்தத்தின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது, அவர்கள் முருகானந்தத்தில் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், முறையான விசாரணை வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர், அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது முருகானந்தத்தின் உறவினர் ஒருவர் காவல் துறையினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து காவல் துறையினர், அங்கிருந்த முருகானந்தத்தின் உறவினர்களை அடித்து விரட்டி வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:புல்தானா பேருந்து விபத்து... டயர் வெடித்து விபத்தா? அதிவேகம் காரணமா? ஆர்டிஒ அறிக்கை கூறுவது என்ன?