கீழமரத்தோணி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்த உறவுகள் ஒன்று கூடுதல் நிகழ்வு! - thenkasi seithikal
தென்காசி:கலிங்கப்பட்டி அருகே கீழமரத்தோணி என்னும் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் வறட்சி காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடி சென்னை, திருச்சி, கோவை, கரூர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர்.
எனவே, இந்த கிராம மக்களின் உறவுகள் பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர், சந்திக்காமல் இருந்து வந்த நிலையில், இந்த கிராமத்தில் உள்ள தலைமையாசிரியர் ஜமாலுதீன் மற்றும் சித்திக் ஆகிய இருவரும் ஒருசேர முயன்று, சமூக வலைத்தளங்கள் மூலம் உறவினர்களை ஒன்று திரட்டினர்.
இதைத் தொடர்ந்து, பள்ளி விடுமுறைக் காலத்தை முன்னிட்டு இன்று(மே 22) அனைவரும் ஒன்று கூடுதல் நிகழ்வு, கீழமரத்தோணி நயினார்ஷா ஜீம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி, சென்னை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கேரள மாநிலம் உள்ளிட்டப் பல்வேறு பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்கள் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
பின்னர், தங்களின் குடும்பத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவதும், பெண் குழந்தைகள் மேற்படிப்புக்குத் தங்களால் முடிந்த உதவி செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 300 குடும்ப உறுப்பினர்கள் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்ட பின்னர், அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை சந்தித்துக் கொள்வதே அரிதாய் உள்ள நேரத்தில், ஒரே கிராமத்தில் வாழ்ந்தவர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டது, தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், இதே போல் அனைத்து கிராம மக்களும் தங்களுடைய உறவுகளை ஒன்று சேர்க்கும்போது தங்கள் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதித்து நடப்பார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:“ஃபீளீஸ் எங்க ஸ்கூல்ல பசங்கள சேருங்க”: வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் செய்த மாணவர்கள்!