பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலயத் திருவிழாவில் ரேக்ளா - வென்றவர்களுக்கு ரூ.1,53,000 பரிசு - Rekla race at Veerasakka Devi temple festival
தூத்துக்குடி: பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி ஆலய 67வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இன்று (மே 14) காலை பாஞ்சாலங்குறிச்சியில் ஆலய விழாக்குழுவினர் சார்பில் மாட்டு வண்டி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்டப் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.
10 மைல் தூரத்திற்கு நடந்த பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 8 வண்டிகளும், 6 மைல் தூரத்திற்கு நடந்த சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் 16 வண்டிகளும் கலந்துகொண்டன. இவை தவிர, 5 மைல் தூரத்திற்கு நடந்த பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் 20 வண்டிகள் கலந்துகொண்டன.
போட்டியின் இறுதியில் பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில், வேலங்குளம் கண்ணன் என்பவரது மாடுகள் முதலிடத்தையும், சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் என்பவரது மாடுகள் இரண்டாம் இடமும், குமாரரெட்டியாபுரம் மாடுகள் மூன்றாவது இடமும் பிடித்தன. சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் அதே சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமாரின் வண்டி முதலிடமும், வேலங்குளம் கண்ணன் என்பவர் வண்டி இரண்டாம் இடமும் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் ஆதனூர் செல்வம் என்பவரது மாடுகள் முதலிடமும், பாஞ்சாலங்குறிச்சி பால ஹரிஹரன் என்பவர் மாடுகள் இரண்டாம் இடமும் பிடித்தன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு முதல் பரிசாக ரூ.71 ஆயிரமும், சிறிய மாட்டு வண்டிக்கு முதல் பரிசாக ரூ.51 ஆயிரமும், பூஞ்சிட்டு வண்டிக்கு முதல் பரிசாக ரூ.31 ஆயிரமும் வழங்கப்பட்டன. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.