ஒரே A4 சீட்டில் 135 கோயில்கள் ஓவியம்.. தஞ்சை மாணவி யமுனாவின் அசத்தல் வீடியோ! - Fashion Technology student
தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சசிகலா, இவர்களின் மகள் யமுனா (19), தஞ்சை தனியார் (மருதுபாண்டியர்) கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
யமுனா ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே ஓவியம் வரைய கற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து தற்போது யமுனா ஏ4 வடிவிலான தாளில், பேனாவை மட்டுமே பயன்படுத்தி தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களான தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில் உள்ளிட்ட 135 கோயில்களையும் வரைந்து அசத்தி வருகிறார். அவரின் ஓவியத்தைப் பார்த்து கல்லூரி நிர்வாகம், தோழிகள், பெற்றோர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இவரது சாதனையைப் பாராட்டி தனியார் நிறுவனமான சோழன் புக் ஆப் ரெக்கார்டு இவருக்கு விருது வழங்கியுள்ளது. இது குறித்து யமுனா கூறியதாவது, "சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைய பழகி வருகிறேன். கடந்த ஒரு மாதமாக, ஏ4 வடிவிலான தாளில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை பென்சில், ரப்பர் இல்லாமல் பேனாவை மட்டுமே பயன்படுத்தி வரைய வேண்டும் என முயற்சி செய்து வரைந்துள்ளேன். இது தொடர்பாகச் சாதனை முயற்சியாகப் பதிவு செய்ய முயன்று வருகிறேன். அடுத்ததாக ஏ3 வடிவிலான தாளில், இந்தியாவில் உள்ள 300 கோயில்களை வரையப் பயிற்சி எடுத்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.