கோவையில் பிடிபட்ட அரியவகை வெள்ளை நிற பாம்பு.. வனத்துறையிடம் ஒப்படைப்பு! - பாம்பு பிடி வீரர் மோகன்
Published : Oct 10, 2023, 6:09 PM IST
கோயம்புத்தூர்:வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த அரியவகை வெள்ளை நிற பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை சுந்தராபுரம் பகுதியில், பாம்பு ஒன்று தனது வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிருப்பதை வீட்டு உரிமையாளர் கண்டுள்ளார்.
பின்னர் உடனடியாக வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரரான மோகன் என்பவருக்கு தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பாம்பு பிடி வீரர் மோகன், பாம்பை பார்த்தபோது, அது அரியவகை வெள்ளை நிற நாகம் என்பது தெரியவந்துள்ளது. இவை பார்சியல் ஆல்பினோ (Partial albino) எனப்படும் மரபணு குறைபாட்டால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் எனக் கூறப்படுகிறது.
பின்னர், தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த இரண்டடி நீள வெள்ளை நிற நாகப் பாம்பை பிடித்த, பாம்பு பிடி வீரர் மோகன் அதை பத்திரமாக வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
மேலும் மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் அடிக்கடி வரக்கூடும் என்பதால், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என பாம்பு பிடி வீரர் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.