பாபநாசத்தில் பூத்த பிரம்ம கமலம் - வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசயத்தால் மக்கள் ஆர்வம்! - rare flower
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை செட்டித் தெருவில் வசித்து வரும் கார்த்திகேயன், தனது வீட்டின் அருகே பாத்திரக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் பல்வேறு மலர்ச் செடிகள், மூலிகைச் செடிகள், காய்கறிச் செடிகளை பல ஆண்டுகளாக ஆர்வமாக வளர்த்து பாதுகாத்து பராமரித்து வருகிறார்.
இதில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரிய வகை பிரம்ம கமலச் செடியினையும் வளர்த்து வருகிறார். இந்தச் செடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூ பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து, காலை பொழுது விடியும் போது வாடும் தன்மை கொண்ட அரிய மலர் வகையாகும்.
இந்த மலர், சிவபெருமான் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக போற்றப்படுகிறது. இந்நிலையில், இவரது வீட்டில் வைத்துள்ள செடியில் நேற்று நள்ளிரவில் பிரம்ம கமலம் பூ பூத்து வீட்டில் உள்ள அனைவரையும், மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பூக்களை அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பலரும் ஆர்வத்துடன் வியந்து பார்த்து செல்கின்றனர்.