பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்ட ராணிப்பேட்டை ஆட்சியர்! - அசோக்
Published : Oct 20, 2023, 2:21 PM IST
ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பொன்னப்பந்தாங்கல் பகுதியை நோக்கி பள்ளிக் குழந்தைகளுடன் ஆம்னி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்னி கார் காலனி பகுதியின் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில், ஆம்னி காரில் இருந்த மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த நிலையில், அவ்வழியாக ஆய்வுக்குச் சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, விபத்துக்குள்ளான ஆம்னி காரைக் கண்டு சிக்கி இருந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்டார்.
இதனைத் தொடர்ந்து பள்ளத்திலிருந்து ஆம்னி காரை தனது வாகனம் மூலம் கயிறு கட்டி சாலைக்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர், பள்ளி மாணவர்களை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் வாகனத்தில் ஏற்றி, பொன்னப்பந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.