சென்னையில் கால்பந்து அகாடாமி திறப்புக்கு ரஜினிகாந்த் வாழ்த்து - Chennai news
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) அங்கீகாரம் பெற்ற எஃப்சி மெட்ராஸ் (FC Madras), சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் உலகத் தரம் வாய்ந்த கால்பந்து அகாடமியை தொடங்கி உள்ளது. இதில் நாடு தழுவிய சாரணர் இயக்கத்தின் மூலம் பல்வேறு வகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 இளம் வீரர்கள் முதன் முறையாக பயிற்சி பெற உள்ளனர்.
இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் இந்தியர்கள் கோலோச்ச முடியும் என எஃப்சி மெட்ராஸ் அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரி கிரிஷ் மாத்ரூபூதம் தெரிவித்துள்ளார். செயல்பாட்டு வழிமுறைத்தளம், மருத்துவ வசதி தளம், உள்ளரங்க மைதானம், நீச்சல் குளம், தங்கும் விடுதி மற்றும் உலகத்தரம் வாய்ந்த மைதானம் ஆகியவற்றை அடக்கி 23 ஏக்கரில் இந்த அகாடமி நிறுவப்பட்டுள்ளது. இந்த உலகத்தரம் வாய்ந்த கால்பந்து மைதானத்தை நிறுவியதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கால்பந்து என்பது சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால், கிரிக்கெட் ஆதிக்கத்தால், கால்பந்து மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் இப்படி ஒரு முன்னெடுப்பு என்பது மிகவும் பாரட்டத்தக்கது. இந்த அகாடமியில் நன்கு பயிற்சி பெற்று மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற சர்வதேச நட்சத்திர கால்பந்து வீரர்களாக இளைஞர்கள் வர வேண்டும். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.