கோவையில் ஜெயிலர் கொண்டாட்டம்; திரையரங்கம் முன்பு கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!
கோயம்புத்தூர்:சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 169வது திரைப்படமான ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், அவரது மகனாக வசந்த் ரவியும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்துள்ளார். மேலும் படத்தில் மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி, தமிழகத்தை தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கு திரையிடப்பட்டது.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு 900 திரையரங்குகளில் வெளியானது. இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 30 திரையரங்குகளிலும் வெளியானது. இதற்காக அதிகாலையிலேயே திரையரங்கு முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர். கோவையில் சாந்தி திரையரங்கம் முன்பு கேக் வெட்டியும், ரஜினியின் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் மேளதாளம் முழங்க ரசிகர்கள் உற்சாக நடனமாடினர். மேலும் இதை போல் கங்கா திரையரங்கம், பாபா காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்து ரசிகர்கள் கூறுகையில் “ரஜினிகாந்தின் 169 படமான ஜெயிலர் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்த இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ளது.
வழக்கமாக அதிகாலையில் படம் வெளியாகும் என எதிர்பார்த்து இருந்த எங்களுக்கு காலை 9 மணிக்கு வெளியானது ஏமாற்றத்தை அளிக்கிறது இருந்தாலும் ரஜினியின் படத்தை முதல் காட்சியாக பார்ப்பதில் தான் தங்களுக்கு மகிழ்ச்சியே உள்ளது” என தெரிவித்தனர்.