தமிழ்நாடு

tamil nadu

பாடல் மூலம் குடிநீர் கோரிக்கையை வைத்த மாணவர்கள்!

ETV Bharat / videos

பாடல் மூலம் குடிநீர் கோரிக்கையை வைத்த புதுக்கோட்டை மாணவர்கள்! - world water day

By

Published : Mar 23, 2023, 9:04 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கலபம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் வழியாக குடிநீர் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது சரியாக குடிதண்ணீர் கிடைப்பதில்லை. ஏனென்றால், 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டி இடிக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகிறது‌. நீர்தேக்கத் தொட்டி இல்லாததால் தண்ணீர் நேரடியாக போரில் இருந்து வருவதால், இடையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சரியாக வருவதில்லை. 

மேலும் வரும் வழியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால், அந்த தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுக்கும் அவல நிலை இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அது மட்டுமல்லாமல், இதற்காக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் தொடர்ந்து மனு கொடுத்து வந்துள்ளனர். 

ஆனால் அந்த மனுவுக்கு இது நாள் வரை நடவடிக்கை எடுக்காததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், நாட்டுப்புறக் கலைஞருமான இளவரசன் என்பவர், அப்பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பாடல் எழுதி உள்ளார். இந்தப் பாடலை உலக தண்ணீர் தினமான நேற்று (மார்ச் 22) அப்பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வம், கேசவர்தினி மற்றும் உருமராஜா ஆகிய மூன்று மாணவர்கள் பாடி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

அந்தப் பாடலில், “அன்புள்ளம் கொண்ட முதல்வருக்கு மாணவர்கள் எழுதும் கடிதம். ஏதோ நாங்கள் இருக்கிறோம், குடிதண்ணீருக்காக தவிக்கிறோம். குடிதண்ணீருக்காக நீண்ட தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வருவதால், நாங்கள் பள்ளிக்குச் செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. பள்ளி மாணவர்களுக்காக பல்வேறுத் திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர், எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கிராமங்கள்தோறும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்” என பாடல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details