'ரஞ்சிதமே' பாட்டுக்கு அசத்தல் நடனமாடிய கலெக்டர் கவிதா ராமு! - புதுக்கோட்டை
புதுக்கோட்டை: ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் பெண்களின் சாதனைகளையும், பெருமைகளையும் பறைசாற்றும் வகையில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை போற்றும் வகையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. எப்போதும் கலைத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அரசு அதிகாரிகளுடன் இணைந்து மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்.
அப்போது மாவட்ட ஆட்சியருக்கு, பெண் பணியாளர்கள் பரிசுகளை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து சினிமா பாடலுக்கு அதிகாரிகள் நடனமாடி அசத்தினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அதிகாரிகளுடன் சேர்ந்து ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி அசத்தினார். மாவட்ட ஆட்சியரின் நடனம், மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கேக் வெட்டி பெண் பணியாளர்கள் அனைவருக்கும் ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி, மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.