புதுச்சேரியில் களைக்கட்டிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்'...ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம்! - ஹேப்பி ஸ்ட்ரீட்
Published : Dec 24, 2023, 7:12 PM IST
புதுச்சேரி:நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, புத்துணர்வோடும் வார விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டு வரும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி புதுச்சேரியில் கடற்கரைச் சாலையில் 2வது முறையாக இன்று (டிச.24) நடத்தப்பட்டது.
புதுச்சேரி காந்தி சிலை முன்பு ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி ஒளிபரப்பப்பட்ட சினிமா பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிலம்பம், பறை இசை, குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி காலை 6 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற்றது. 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் கடற்கரை அருகே உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் முதல் முறையாகச் சென்னையில் தொடங்கிய ஹேப்பி ஸ்ட்ரீட் கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.