பணி நிரந்தரம் வேண்டும்.. திருவாரூரில் மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!
Published : Jan 4, 2024, 11:46 AM IST
திருவாரூர்: தமிழ்நாடு முழுவதும், தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கம் சார்பில், பணி நிரந்தரம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமையில், 200க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமன ஆணை, கால முறை ஊதியம், கடந்த நவம்பர் 9, 2011ஆம் ஆண்டு முதல் இறந்து போன மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் குடும்பங்களுக்கு திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபடி ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை மற்றும் வாரிசு வேலை, பணியிட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில், சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 31 முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.