சர்வசாதாரணமாக உலா வரும் காட்டு எருமை - அச்சத்தில் கோத்தகிரி மக்கள் - ஒற்றை காட்டெருமை
நீலகிரி:கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் கரடி, காட்டு எருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சமீப காலமாக இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகி வருகிறது. இதில் குறிப்பாக காட்டு எருமைகள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளைப் போன்று சர்வசாதாரணமாக குடியிருப்புப் பகுதிகளில் வலம் வருகிறது.
குறிப்பாக கோத்தகிரி அடுத்த காம்பைக்கடை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டெருமை, நாள்தோறும் மாலை வேளைகளில் சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதிகளிலுள்ள பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள், வேலை முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் என அனைவரும் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் மாணவர்கள் அந்த ஒற்றை காட்டெருமையைக் கண்டு பயந்து அலறி அடித்து ஓடியுள்ளனர். எனவே வனத்துறையினர் அந்த ஒற்றை காட்டு எருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.