திருவண்ணாமலையில் பாரம்பரிய உணவுத் திருவிழா - ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்!
திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று ( ஏப்.23) நடைபெற்றது. நமது முன்னோர்கள் பயன்படுத்தி தற்போது நாம் மறந்துபோன உணவு வகைகள், நெல் ரகங்கள், சிறு தானிய உணவு வகைகள், மூலிகைப் பொருட்கள், மூலிகை எண்ணெய்கள் உள்ளிட்டவைகள் இந்த உணவுத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டன.
குறிப்பாக பாரம்பரிய உணவுப்பொருட்களான தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, நாட்டு சாமை, சம்பா கோதுமை, சோளம், ராகி, பனிவரகு, நாட்டு சாமை, குலசாமை உள்ளிட்ட பாரம்பரிய சிறு தானியங்கள் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கற்றாழை, வேம்பு, செம்பருத்தி உள்ளிட்ட மூலிகை சோப்பு வகைகள், பனை ஓலைகளால் செய்யப்பட்ட நகைகள், மரச்செக்கு எண்ணெய்கள், நாட்டு விதைகள், இயற்கை காய்கறிகள், பாரம்பரிய தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள், இனிப்புகள், முறுக்கு, சீடை, அதிரசம், ராகி, கேழ்வரகு, சோளம், கஞ்சி ஆகிய உணவு வகைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்டு சுவைத்து மகிழ்ந்தனர்.
மேலும் பாரம்பரிய விதைகள், பொருட்கள், உணவுப்பொருட்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றினை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். உணவுத் திருவிழாவினை காண வந்த பொதுமக்களுக்கு இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் தினை பழ கேசரி, வாசனை சீரகச் சம்பா, பலா பரியாணி, தூயமல்லி பல கீரை சாதம், மணிச்சம்பா தயிர் சாதம், பாரம்பரிய காய்கறி கூட்டுச் சாதம், பாரம்பரிய அப்பளம், உள்ளிட்டவைகளை சமைத்து மதிய உணவாக விருந்து அளித்தனர். இதனை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:வெயிலின் தாக்கத்தைத் தணிக்க வாடிக்கையாளர்களுக்கு பனிச்சாரல்! தேநீர் கடையின் புது முயற்சி!