தாய் நாயின் 3 மணி நேரம் பாசப்போராட்டம்: உதவி செய்த பொதுமக்கள்! - வந்தவாசி
திருவண்ணாமலை: வந்தவாசி பஜார் பகுதியில் தாய் நாயின் 3 மணி நேர பாச போராட்டத்தை கண்ட பொதுமக்கள் ஆச்சர்யமடைந்து அதற்கு உதவி செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பஜார் வீதி உள்ளது. அங்குள்ள குளிர்பான கடைக்கு பின்புறம் உள்ள பகுதியில் பெண் நாய் ஒன்று 6 குட்டிகளை ஈன்றுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது, இதன் காரணமாக குட்டிகள் இருந்த இடத்தில் தண்ணீர் தேங்கின. இதனால் தாய் நாய் செய்வதறியாமல் திகைத்தது.
இந்நிலையில் நேற்று தாய் நாயானது தான் ஈன்ற குட்டிகளில் ஒன்றை தன் வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு எங்கு செல்வதென்று தெரியாமல் பஜார் வீதியில் அங்கும் இங்கும் ஓடியது. பின்னர் தனியார் திருமண மண்டபம் ஒன்றின் எதிரில் உள்ள சாலையில் குட்டியை வைத்துவிட்டு சாலையில் நடந்து செல்பவர்களை அழைத்துள்ளது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு பெரியவர் சாலையிலிருந்த நாய் குட்டியை எடுத்து கொண்டு தனியார் மண்டப வாசலில் வைத்தார். அப்போது அந்த தாய் நாய் அவரை விடவில்லை. இதனை பார்த்த அருகில் இருந்த சிலர் அந்த பெரியவரிடம், இந்த நாய் ஒவ்வொரு குட்டியாக தன் வாயில் கவ்விக் கொண்டு மேலே எடுத்துச் சென்று வைத்து வருகிறது என்று கூறினார்.
பின்னர் அந்தப் பெரியவர் ஏற்கனவே இரண்டு குட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த ஒரு குட்டியையும் வைத்தார். மேலும் தாய் நாய் மீதம் உள்ள இரண்டு குட்டிகளையும் எடுப்பதற்காக இங்கும் அங்கும் ஓடியது. இதைப் பார்த்த பொதுமக்கள் தாய் நாயின் பாச போராட்டத்தைக் கண்டு பெரும் வியப்பை அடைந்தனர்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் மீதம் இருந்த 2 குட்டிகளை குளிர்பான கடைக்கு பின்புறம் இருந்து மீட்டனர். அதனை தாய் நாய் வைத்திருந்த இடத்திற்கு அருகில் வைத்தனர். அப்போது தாய் நாய் அவர்களை மீண்டும் குட்டிகள் இருக்கும் இடத்திற்கு எடுத்து வைக்க அழைத்தது.
இதனைக் கண்ட அந்த இரண்டு இளைஞர்களும் வியப்படைந்தனர். பின்னர் மீட்ட 2 குட்டிகளையும் தாய் நாய் வைத்திருந்த அதே இடத்தில் தாயிடம் வைத்தனர். இந்த பாசப் போராட்டத்தை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.
இச்சம்பவம் அங்கிருந்த மக்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்தது. குட்டிகளை இயன்ற தாய் நாய் பஜார் வீதிகளில் அலைந்து திரிந்தது பலரை நெகிழ வைத்தது. அதன் பாச போராட்டம் 3 மணி நேரம் வரை நீடித்தது.