ஆதிதிராவிட மக்களுக்கு 2018-இல் வழங்கிய பட்டா நிலத்தை இன்னும் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு!
Published : Oct 27, 2023, 12:54 PM IST
வேலூர்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேதுகரை மற்றும் கொண்ட சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசிப்பதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 230 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பட்டா வழங்கிய 6.30 ஏக்கர் நிலத்தை இதுவரை அளந்து கொடுக்கவில்லை என்று இந்திய குடியரசு கட்சி சார்பில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மேலும், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இடத்தை கல்லேரி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராமு மற்றும் வெங்கட் முனி என்பவர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், இந்த வேலியை அகற்றித் தரும்படி பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால், அந்த மனுவிற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய குடியாத்தம் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர், அந்த இடம் தற்போது நீதிமன்ற வழக்கில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். அதன் பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.