கோயிலில் நந்தி சிலை வைத்த ஒரு தரப்பு - சிலையை அகற்ற அறநிலையத்துறை முயற்சி!
தேனி மாவட்டம்அல்லிநகரம் மலையடிவாரப் பகுதியில் உள்ளது, அருள்மிகு வீரப்ப அய்யனார் கோயில். இக்கோயில் அல்லிநகரம் கிராம கமிட்டி நிர்வாகத்தினரால் நிர்வகிக்கபட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
சமீபத்தில் இந்த கோயிலில் இருந்த கொடிமரம் முற்றிலும் சேதமடைந்த நிலையில் கொடிமரம் மற்றும் நந்தி சிலைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் கொடிமரம் அருகில் இருந்த நந்தி சிலைக்கு பதிலாக சுமார் 6 அடி உயரமுடைய நந்தி சிலையை கிராம கமிட்டி சார்பாக கடந்த நாட்களுக்கு முன்பு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் முன்பு நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயிலை சிலர் தங்களின் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொண்டு அனுமதியில்லாமல் நந்தி சிலையை அமைத்ததாக மற்றொரு தரப்பினர் இந்து சமய அறநிலைதுறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, நந்தி சிலை அனுமதியின்றி அமைக்கபட்டதாக கூறி அதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறையினர் ஈடுபட்டனர். இதனையறிந்த அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் கோயில் முன்பு திரண்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தபட்டது. மேலும் இந்த பிரச்னை முடியும் வரை நந்தி சிலை பிரதிஷ்டை செய்யக் கூடாது என்றும், எவ்வித கட்டுமானப் பணிகள் செய்ய கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.