சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்! - Chief Minister of Andhra Pradesh
Published : Oct 1, 2023, 10:43 PM IST
திருவள்ளூர்:ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கடந்த 8 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியினர் முழு கடை அடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வரும் மூன்றாம் தேதி வரை, காவலில் வைத்திருக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்யக்கோரி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மண்டலம் திருமலை நாயக்கர் பேரவை சார்பாக இன்று(அக்.01) திருநின்றவூர் தனியார் மண்டபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதலில் ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கைது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், பின்னர் அவரை விடுதலை செய்யக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர், திருமலை நாயக்கர் பேரவை சார்பாக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருமலை நாயக்கர் பேரவை சங்கத் தலைவர் ஜி.பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேச கட்சியின் சார்பாக மூத்த தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.