Manipur Violence: பாஜக அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - protest in coimbatore collector office
கோவை:மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இரண்டு பெண்களை நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்தும், பாஜக அரசைக் கண்டித்தும் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மயூரா ஜெயக்குமார், "மணிப்பூரில் பல்வேறு பிரச்னைகள் நடைபெற்று வருகிறது. இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள். பழங்குடி மக்களை காக்கத் தவறிய பிரதமர் மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். வருகின்ற தேர்தலில் மக்கள் மோடிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என மயூரா ஜெயக்குமார் தெரிவித்தார்.