மருத்துவக் கழிவுகளைக் குப்பையில் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம்! - தனியார் மருத்துவமனைக்கு அபராதம்
சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளை பாய்லர் மூலம் முறையாக அழிக்காமல் குப்பைகளில் கொட்டுவதாகப் புகார் எழுந்தது. அதன்படி, மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று(மே.3) ராஜகீழ்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் குப்பைகளில் வீசியதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து தாம்பரம் மாநகராட்சி சுதாதாரத்துறை துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் சுகாதார ஊழியர்கள் தகுந்த ஆதாரங்களைத் திரட்டி, சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர்.
மேலும், இதுபோல பொது சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் மருத்துவமனைகளுக்கு முதல் முறை அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.