"செல்லும் இடமெல்லாம் கேப்டனின் உடல் நலம் குறித்து கேள்வி" - பிரேமலதா விஜயகாந்த்! - பிரேமலதா விஜயகாந்த்
Published : Aug 22, 2023, 7:43 AM IST
தேனி: அல்லிநகரம் பகுதியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை ஒழிப்பு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "கேப்டன் எப்படி இருக்கிறார் என்று நான் போகும் இடமெல்லாம் என்னிடம் கேட்கிறார்கள். கேப்டன் நல்லா இருக்கிறார். நம்மோடு 100 ஆண்டு காலம் இருந்து நம்மளை வழிநடத்துவார். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், நல்லவர்கள் வாழ்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ந்ததாக இருக்கக் கூடாது.
கேப்டன் போல் நல்லவர்கள் வாழ வேண்டும். அதைப் பார்த்து ஒரு 100 பேர் மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாநாட்டை தேமுதிக கூட்ட உள்ளது. அதற்கு நிச்சயம் கேப்டன் வருவார். மேலும், என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், என் மீது சேற்றை இறைத்து வீசட்டும். அது என்னை ஒன்றும் பாதிக்காது. ஏனென்றால் நான் கேப்டனின் மனைவி.
கேப்டனின் மறு உருவமாக விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் இருக்கிறார்கள். தொண்டர்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை. திமுக அரசு தகுதி உள்ள பெண்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை என்று கூறுகிறார்கள். வாக்கு கேட்கும் போது தகுதி பார்த்து பெண்களிடம் வாக்கு கேட்கிறீர்களா.
யார் யார் வீட்டிற்கோ ரைடு செல்கிறார்கள், முதலில் ரைடு செல்ல வேண்டியது அமைச்சர் துரைமுருகனிடம் தான். தமிழக அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனையோ ஊழல்கள் செய்து வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.