ஐப்பசி மாத பௌர்ணமி.. திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்! - Girivalam
Published : Oct 29, 2023, 9:48 AM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி விழா உலக பிரசித்தி பெற்றதாகும்.
அண்ணாமலையார் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ளலாம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று காலை பௌர்ணமி தொடங்கியதால், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து, 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர். இதனால் கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பியது.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகருக்குள் வரும் ஒன்பது சாலைகளில் தற்காலிக பேருந்து நிலையம், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.