அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்குக-கோழி வளர்ப்புத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்! - CPF வெளிநாட்டுக் கோழிவளர்ப்புத் தொழிற்சாலை
வேலூர்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பங்கரிசி குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான CPF வெளிநாட்டுக் கோழிவளர்ப்புத் தொழிற்சாலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதேபோல் பள்ளிகொண்டு அடுத்த அகரம் சேரி பகுதிகளிலும் வெளிநாட்டுக்கோழி வளர்ப்பு கம்பெனி இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம், மேல்பட்டி, ஆலங்குப்பம், செட்டிகுப்பம், கூட நகரம், உள்ளிட்ட பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 13 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்குமாறு பலமுறை கம்பெனி நிர்வாகத்திடம் வலியுறுத்தி எந்த பயனும் இல்லாததால் நேற்று (ஜூலை 27) முதல் 70 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது பணியை முடித்துவிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர்களுக்கு நிர்ணயித்த ஊதிய உயர்வு கிடைக்கும் வரை பணி செய்து கொண்டே வீட்டிற்கு செல்லாமல் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.