"மக்களுக்கு பொங்கல் பரிசாக மண் பானையும், அடுப்பும் வழங்க வேண்டும்" - மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை! - மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை மனு
Published : Nov 6, 2023, 1:31 PM IST
கோயம்புத்தூர்:தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, மண்பானையையும் மண் அடுப்பையும் கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும். மழைக்கால நிவாரண நிதியாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாயை 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கு ஆணை வழங்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த மனு தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய ராஜகோபால், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மண்பானையையும், மண் அடுப்பையும் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதால், இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவார்கள்.
மேலும் மழைக்கால நிவாரண நிதியாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ஐந்தாயிரம் ரூபாயை 8000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இதன் மூலம் பழங்கால தொழில் ஊக்குவிக்கப்படும்” எனவும் தெரிவித்தார். ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்கள், மண்பானையையும், மண் அடுப்பையும் தலையில் ஏந்தி, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.