இடிந்து விழும் நிலையில் உள்ள பூந்தமல்லி காவல் நிலையம்..! அச்சத்தில் பணியாற்றும் காவலர்கள்..! - Poonamallee Police Station
Published : Dec 6, 2023, 10:59 PM IST
சென்னை: மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை மாநகரில் கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை முழுவதுமாக வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது. அதில் ஒருபகுதியாக பூந்தமல்லி காவல் நிலையம் வெள்ளக் காடாக மாறியுள்ளது. காவல் நிலையம் அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் என்பதால் பெய்த கனமழையைத் தாங்க முடியாமல் சுவர்கள் உதிர்ந்து கொட்டுகிறது.
மேலும் காவல் நிலையத்தின் பல பகுதிகளில் மேற்கூரைகள் இடிந்து விழுவதால் மிகுந்த அச்சத்துடன் காவலர்கள் பணி செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதுமட்டும் அல்லாது காவல் நிலையத்தின் அனைத்து அறைகளிலும் மழை நீர் புகுந்துள்ளதால் காவல் நிலைய கோப்புகள் நீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
காவல் நிலையத்தைச் சுற்றி முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி இருப்பதால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் அழையா விருந்தாளியாக வருகை தருவதாக காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக தேங்கி இருக்கும் மழை வெள்ளத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் இடிந்து விழும் சூழலில் உள்ள கட்டிடத்தைப் புதுப்பித்துத் தர வேண்டும் எனவும் பூந்தமல்லி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.