பெரியகுளத்தில் மாதர் சங்கத்தின் 48ஆவது ஆண்டு விழா - பொன்னம்பல அடிகளார் பேச்சு - பெரியகுளம்
தேனி:பெரியகுளத்தில் மங்கையர்க்கரசி மாதர் சங்கத்தின் 48வது ஆண்டு விழா நடைபெற்றது. பெரியகுளம் தென்கரையில் உள்ள காளஹஸ்தி நாதர் திருக்கோயிலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, புலவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். மங்கையர்க்கரசி மாதர் சங்க உறுப்பினர்கள் வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்த விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு, அவர்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில், “வாழ்க்கை என்பது தற்பொழுது வரவு-செலவு கணக்காய் போய்விட்டது. தந்தை மகனுக்குள்ளேயே வரவு-செலவு கணக்கு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். மேலும், அறிஞர் பெருமக்கள் கூறும் பொழுது ‘காலம் பொன் போன்றது’ என்று கூறுவார்கள். காலம் பொன்னை விட சிறப்பு வாய்ந்தது ஆகும். இழந்த பொன்னை மீண்டும் பெற்று விடலாம். ஆனால், இழந்த காலத்தை மீண்டும் பெற முடியாது” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பெண்கள் குறித்து குறிப்பிடுகையில், உலகத்தில் பெண்கள், தான் சார்ந்த முடிவுகளை தான்தான் எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர் என்றும், ஒரு குட்டி கதை கூறி அதனை விளங்க வைத்தார். மேலும் அவர் கூறுகையில், இன்று மாணவர்கள் தினமாகும் என்றும், நாள்தோறும் கற்பவர்கள்தான் நல்ல மாணவர்கள் ஆவார்கள் என்றும், நல்ல தலைமுறையினரை உருவாக்குபவர்கள்தான் நல்லாசிரியர்கள் ஆவார்கள்” என்றும் தெரிவித்தார்.
மேலும், மங்கையர்க்கரசி மாதர் சங்கம் 48 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவது குறித்து தனது பாராட்டுதல்களையும் தெரிவித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில், மங்கையர்க்கரசி மாதர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.