தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறையில் களைகட்டிய பொங்கல் திருவிழா.. பாரம்பரிய உடையணிந்து பொது மக்கள் பொங்கல் கொண்டாட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 4:24 PM IST

மயிலாடுதுறையில் களைகட்டிய பொங்கல் திருவிழா

மயிலாடுதுறை:தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த பெரும் பொங்கல் நாளில் விளைநிலங்களில் விளைந்த புத்தரிசி, காய்கறிகளைச் சூரிய பகவானுக்குப் படைத்து வீட்டின் முன்பு வண்ண வண்ண கோலமிட்டு தை முதல் நாளில் பொங்கலிடுவது வழக்கம்.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நகரங்களில், கிராமங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தரங்கம்பாடி தாலுக்கா கனிவாசல் கிராமத்தில், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு பொங்கல், பானை, கரும்பு வரைந்தும், வண்ண, வண்ண கோலமிட்டடனர்.

அதனைத் தொடர்ந்து குளித்துவிட்டு பராம்பரிய உடையான வேட்டி, புடவை, பாவாடை தாவணி கட்டி, குத்துவிளக்கு ஏற்றி, பூ, பழங்கள், காய்கறிகள், கரும்பு ஆகியவை வீட்டின் வாசலில் வைத்து சூரிய பகவானுக்கு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி படையலிட்டனர். பின்னர், மஞ்சள், இஞ்சி, போன்றவற்றை புதுப்பானையில் கட்டி அடுப்பில் வைத்து பால், புத்தரிசியிட்டு பொங்கலிட்டனர்.‌

பொங்கல் பொங்கி வரும்போது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!! என தாலம் தட்டி குலவையிட்டு உற்சாகமாக கொண்டாடினர். பின்னர் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் காய்கறிகள் கூட்டுகளை வைத்து சூரிய பகவானை வணங்கி கொண்டாடினர்.

ABOUT THE AUTHOR

...view details