வாணியம்பாடி காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா.. உற்சாகத்துடன் கொண்டாடிய காவலர்கள்! - வாணியம்பாடி காவல் நிலையம்
Published : Jan 14, 2024, 3:45 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வாணியம்பாடி உட்கோட்ட காவல் துறையினர் சார்பில், சமத்துவப் பொங்கல் விழா, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த சமத்துவப் பொங்கல் விழாவில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். வாணியம்பாடி நகர மற்றும் கிராமிய காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களும் ஒன்றிணைந்து, பொங்கல் பானையில் பொங்கலிட்டு சமத்துவப் பொங்கலைக் கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து, காவல் நிலைய வளாகத்தில் இசை நாற்காலி, கயிறு இழுத்தல், கோலப்போட்டி ஆகியவை நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிசுப் பொருட்களை வழங்கினார். இந்த விழாவை மேளதாளங்களின் உற்சாகத்துடன், வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பழனி மற்றும் காவலர்கள் என அனைவரும் சமத்துவப் பொங்கலை கொண்டாடினர்.
மேலும் இந்த சமத்துவப் பொங்கல் விழாவில், வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் துரை ராஜ், உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.